விண்வெளி ஊடுகதிர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டஎக்ஸ்போசாட்”  செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி - 58 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

எக்ஸ்போசாட் : இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள கருந்துளையில் இருந்து வெளியேறும் ஊடுகதிர்களை (எக்ஸ்-ரே) ஆய்வு செய்யும். மொத்தம் 469 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோளில் போலிக்ஸ் ( எக்ஸ் - ரே போலாரி மீட்டர்) மற்றும் எக்ஸ்பெக்ட் (எக்ஸ்- ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் அண்ட் டைமிங்) ஆகிய இரு வேறு ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு கருவிகளையும் பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனமும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன. புவி தாழ்வட்டப் பாதையில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவை ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. விண்வெளியில் உள்ள கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஊடுகதிர்களின் துருவ முனைப்பு அளவு, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், கருந்துளை வாயு திரள் (நெபுலா) ஆகியவற்றின் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும். நியூட்ரான் விண்மீன்கள் புவியின் நிழலைக் கடந்து செல்லும்போதோ, கிரகணம் நிகழும்போதோ இந்த ஆய்வை அவ்விரு கருவிகளும் துல்லியமாக மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிஎஸ் எல்வி சி-58 ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 10 ஆய்வுக் கருவிகளும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களுக்கு மேற்கொள்ள உள்ளன. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்த கருவியும் அதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.